Tamil Murasu | 2 Mar 2025

ரமலான் மாதத்தை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் கைகோத்து காஸாவில் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு உதவிக்கரம் நீட்டும் முயற்சியில் இறங்கினர். ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தில் ‘ஹியுமானிட்டி மேட்டர்ஸ்’ எனும் லாப நோக்கற்ற அமைப்பு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) காஸா நிவாரண உதவிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
5,000 பிள்ளைகள் பயன்பெறும் வகையில் அன்பளிப்புப் பைகளைப் பொட்டலம் கட்டும் நடவடிக்கையில் தொண்டூழியர்கள் ஈடுபட்டனர். விளையாட்டுப் பொருள்கள், தின்பண்டங்கள், தண்ணீர் போத்தல்கள் போன்றவை அன்பளிப்புப் பைகளில் வைக்கப்பட்டன.
வாரயிறுதி நாளாக இருந்தாலும் காலையிலிருந்து தொண்டூழியர்கள் உன்னத நோக்கத்துக்காக ஒன்றிணைந்தனர்.
பிரதமர் லாரன்ஸ் வோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொண்டூழியர்களின் உழைப்பைப் பாராட்டினார்.
அவருடன் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம், உள்துறை, தேசிய வளர்ச்சித் துணை அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம், நீ சூன் குழுத்தொகுதியின் இதர அடித்தள ஆலோசகர்கள் ஆகியோரும் வருகை புரிந்திருந்தனர்.
“பிறருக்கு உதவ முன்வரும் மாதமாக ரமலான் மாதம் விளங்குகிறது. சிங்கப்பூரில் இருக்கும் அனைத்து இனம், சமயங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி காஸாவில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ முன்வந்துள்ளனர். காஸா தொலை தூரத்தில் இருந்தாலும் அங்குள்ள மக்கள் படும் துயரம் நம்மைப் பாதிக்கிறது. சிங்கப்பூர் தொடர்ந்து மத்திய கிழக்கில் உள்ள அதன் பங்காளிகளுடன் இணைந்து காஸாவுக்கு உதவும்,” என்று பிரதமர் வோங் தமது உரையில் குறிப்பிட்டார். மனிதநேய நிவாரணத்திற்கு அப்பாற்பட்டு பாலஸ்தீன அதிகாரத்தின் முயற்சிகளுக்கு சிங்கப்பூர் கைகொடுக்கும். பாலஸ்தீனர்கள் தங்களின் சொந்த மாநிலத்தை ஆளும் முயற்சிக்கும் சிங்கப்பூர் உதவும். நாம் சிறு புள்ளியாக இருந்தாலும் நம்மால் முடிந்தவரை தேவைப்படுவோருக்கு உதவி செய்வோம். காஸாவில் நடக்கும் துயரம் உலகின் துரதிர்ஷ்ட நிலையைப் பிரதிபலித்தாலும் சிங்கப்பூரர்கள் ஒற்றுமையாக இருந்தால் நம்மால் எதையும் கையாள முடியும். இதுதான் சிங்கப்பூரின் அடையாளம்,” என்று நிதி அமைச்சருமான திரு வோங் தெரிவித்தார்.
தொடர்ந்து ஸ்ரீ நாராயண மிஷன் வளாகத்தில் நோன்புத் துறப்பு நிகழ்ச்சி இடம்பெற்றது. சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான அதிபர் மன்றம், சமய நல்லிணக்கத்துக்கான அதிபர் மன்றம், சமயங்களுக்கு இடையிலான அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள், சமூகத் தலைவர்கள் ஆகியோர் அதில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பசிபிக் அனைத்துலக விமான நிறுவனம் ஹியுமானிட்டி மேட்டர்ஸ் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. அமைச்சர் சண்முகம் முன்னின்று அதை வழிநடத்தினார்.
ஹியுமானிட்டி மேட்டர்ஸ் அமைப்பின் நிவாரண உதவிக்குக் கைகொடுக்கும் விதமாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்படும்.
“சிங்கப்பூர் அதன் எஸ்ஜி60 கொண்டாட்டத்தை நோக்கிச் செல்லும் இவ்வேளையில் நம் நாடு சிறியதாக இருந்தாலும் நம்மால் பெரிதாகப் பங்களிக்க முடியும் என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்துகிறது,” என்று உதவித் திட்டத்திற்கு தங்கள் வளாகத்தில் இடம் அளித்த ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தேவேந்திரன் கூறினார்.
இரண்டு நாள்களாக தொண்டூழியத்தில் ஈடுபட்டு வரும் 70 வயது தொண்டூழியர் கணேசன் குழந்தை, ஹியுமானிட்டி மேட்டர்ஸ் அமைப்பு தொடங்கியதிலிருந்து உதவி வரும் அவர், அனைத்து இனங்கள், சமயங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து உதவ முன்வருவது மிக உன்னதமான செயல் என்றார்.
تعليقات