Tamil Murasu | 5 February 2022
சமய நம்பிக்கை குழுக்களிடையே விழிப்புணர்வை வளர்க்கவும் புரிந்துணர்வை ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்ட திட்டம் ஒன்று விரிவான அளவில் மேம்படுத்தப்பட்டு உள்ளது.
‘ஃபெய்த்ஃபுல் ஃபுட்பிரிண்ட்’ எனப்படும் அந்தப் புதிய சமய நம்பிக்கை மரபுடைமைத் திட்டத்தை கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் நேற்று தேசிய வளர்ச்சி அமைச்சு கட்டடத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டம் அடுத்த மாதம் (மார்ச்) முதல் செயல்படத் தொடங்கும்.
அடித்தள அமைப்புகள், இளையர், ‘பல இன, சமய நம்பிக்கை வட்டாரம் (ஐஆர்சிசி)’ என்னும் அமைப்பு, மதரசா மற்றும் சிறப்பு உதவித் திட்ட பள்ளிகள் ஆகியவற்றை இந்தத் திட்டம் தற்போது உள்ளடக்கி உள்ளது.
முதன்முதலாக கடந்த 2019ஆம் ஆண்டு முன்னோடித் திட்டமாக உருவாக்கப்பட்ட இத்திட்டம் குடியிருப்பாளர்களையும் பூர்வீகமல்லாத குடிமக்களையும் தெரிந்துகொள்ளவும் ஒருங்கிணைக்கவும் நோக்கம் கொண்டது.
அனுபவபூர்வ பயணங்கள் மூலமும் புலம்பெயர்ந்து வந்த முன்னோடித் தலைமுறையினரும் சமய நம்பிக்கை சமூகங்களும் கூட்டாக இந்த நாட்டிற்கு அளித்த பங்களிப்பை கதைகள் வாயிலாகவும் சிங்கப்பூரின் பல கலாசார முறையை அவர்கள் அறிந்துகொள்ளவும் உதவுக் கூடியது இத்திட்டம்.
இதனை வழிநடத்தும் ‘ஹ்யூ மேனிட்டி மேட்டர்ஸ்’ என்னும் மனிதாபிமான அனைத்து சமய நம்பிக்கை அமைப்பு தற்போது திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி உள்ளது. இதற்காக உருவாக்கப்பட்ட மூன்று அம்சங்கள் தற்போது ஐந்து அம்சங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த அம்சங்களில் பங்கேற்போர் சமூக ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் மீள்திறனை பாதிக்கக்கூடிய பிரச்சினைகள் பற்றி கலந்து ஆலோசிக்கவும் ஒருவருக்கொருவர் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் திட்டம் உதவுகிறது.
“இதர சமூகங்களால் பின்பற்றப்பட வேண்டிய நல்லிணக்கத்தின் சின்னமாக விளங்கும் சிங்கப்பூர் தனது வெற்றிப் பயணத்தை நிறுத்திவிடக்கூடாது,” என்று அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்தார்.
Comments