top of page
In The News

சிங்கப்பூரின் பன்முகத்தன்மை உலகளவில் வலுவானது: ஹெங்

Tamil Murasu   |   13 August 2019

தென்கிழக்கு வட்டார குடியிருப்பாளர்களுடன்

சிங்கப்பூர் அதன் இன, சமய பன்முகத்தன்மையை உலகளவிலான பலமாக மாற்ற இயலும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கிட் கூறியுள்ளார்.

“அமைதியை நிலைநாட்டுவது, வெவ்வேறு சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கம் காண்பது போன்றவற்றுக்கான முயற்சிகளையும் அனுபவங்களையும் சிங்கப்பூர் உலகின் மற்ற நாடடுகளுடன் பகிர்ந்துகொள்ள முடியும். 

“குறிப்பாக, வேற்றுமைகள் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் சிங்கப்பூரால் அது முடியும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.இதனை நாம் சொல்வதால் நாம் ஆணவம் நிறைந்தவர் என்று பொருள்படாது. உலகிற்கு நாம் ஓர் உதாரணம். அவ்வளவுதான். 

“ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் சொந்த கலாசாரம், பூர்வீக வரலாறு மற்றும் பண்பாடு போன்றவை உண்டு. இருப்பினும் நாம் கற்றுக்கொண்டவற்றையும் நாம் அனுபவித்தவற்றையும் பகிர்ந்துகொள்ள உலக மக்களுடன் கைகோக்க நம்மால் முடியும்,” என்று கூறினார் திரு ஹெங்.

இருப்பினும் சிங்கப்பூரின் சமய நல்லிணக்கம் என்றென்றும் நிலைத்திருக்கும் என  அசட் டையாக இருந்துவிட முடியாது என்றும் மிகவும் முக்கியமான ஒன்றாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய அம்சம் அது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“நீங்கள் ஒவ்வொரு நாளும் செய்தித்தாளைப் புரட்டும்போது உலகின் எங்காவது ஒரு மூலையில் இனம், சமயம், மொழி தொடர்பான சச்சரவு பற்றிய செய்தியை குறைந்தபட்சம் ஒரு பக்கத்திலாவது காண்பீர்கள். 

“இப்படிப்பட்ட சூழ்நிலையில், பல இன, பல கலாசார, பல சமயம் நிறைந்த சமூகத்தில் நல்லிணக்கத்தைப் பராமரிப்பது என்பது நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய முயற்சி ஆகிறது,” என்று துணைப் பிரதமர் கூறினார்.

நிதி அமைச்சருமான திரு ஹெங், தென்கிழக்கு வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 60 குடியிருப்பாளர்கள் மத்தியில் நேற்று உரையாற்றினார். தெமாசெக் அறநிறுவனத்தின் நன்னம்பிக்கைத் திட்டத் தொடக்கத்தின் தொடர்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் அவர் கலந்துகொண்டு பேசினார். அரை நாள் நடைபெற்ற நிகழ்ச்சி 1.7 கிலோ மீட்டர் மரபுடைமைப் பயணத்தை உள்ளடக்கியதாக அமைந்தது. பென்கூலன் வட்டாரத்தில் நீண்ட வரலாற்றைக் கொண்ட எட்டு வழிபாட்டுத் தலங்களைக் கடந்துசெல்வதாக அந்தப் பயணம் இருந்தது. பின்னர் மேக்ஸ்வெல் ரோட்டில் அமைந்துள்ள வேற்றுமையில் நல்லிணக்கம் தொடர்பிலான காட்சிக்கூடத்திற்கு குடியிருப்பாளர்கள் வருகையளித்தனர்.

சிங்கப்பூரில் இனக் கலவரங்களால் 1950களிலும் 1960களிலும் கொந்தளிப்பான நிலைமை இருந்ததை அந்தக் காட்சிக்கூடத்தில் அவர்கள் தெரிந்துகொண்டனர். 

உலகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் அதில் தங்களால் எவ்வாறு பங்கு வகிக்க முடியும் என்பதையும் புரிந்துகொள்வது சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளுக்கு முக்கியம் என்று அவர் கூறினார்.

சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தபோது இஸ்லாமிய நிதியளிப்பு பற்றிய விவகாரத்தைக் கையாள நேரிட்டதையும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று அதுதொடர்பான விவரங்களை அறிந்து வந்ததையும் திரு ஹெங் நினைவுகூர்ந்தார். 

 

அதேபோல தடையற்ற வர்த்தக உடன்பாட்டிற்கான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றபோது இந்தியாவில் வர்த்தகம் புரிவதிலுள்ள சிக்கல்களை தெரிந்துகொண்டதையும் நேற்று அவர் விவரித்தார்.
 

Scan 5 Sep 2019.jpg
bottom of page