Tamil Murasu | 5 September 2021
சமூக நடத்தையையும் நெறிமுறைகளையும் வடிவமைக்கும் முயற்சியாக புதிய இன நல்லிண்ணக்கச் சட்டத்தில் தண்டனைக்கு உட்படாத தடைகள் சேர்க்கப்படக்கூடும் என சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்து உள்ளார்.
இன நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம் என்ற பெயரில் புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட இருப்பதாக கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தமது தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் லீ சியன் லூங் அறிவித்தார்.
கொவிட்-19 கொள்ளைநோய் பரவலுக்கிடையிலான மனஉளைச்சலின் அடிப்படையில் இனவாதச் சம்பவங்கள் அதிக அளவில் பதிவானதைத் தொடர்ந்து திரு லீயின் அறிவிப்பு வெளியானது.
புதிய சட்டம் குறித்து நேற்று நடைபெற்ற ‘எஸ்ஜி கோர்’ என்னும் சமூகப் பயிற்சித் திட்டத் தொடக்க நிகழ்வில் அமைச்சர் கா.சண்முகம் விளக்கினார்.
தமது உள்துறை அமைச்சு இச்சட்டத்தை அறிமுகம் செய்யும் என்று குறிப்பிட்ட அவர், அதற்கு முன்னதாக, இனவாதப் பிரச்சினை
களைக் கையாள நடப்பிலுள்ள குற்றவியல் தண்டனைச் சட்டம் உள்ளிட்ட வெவ்வேறு சட்டங்களை அமைச்சு ஒருங்கிணைக்கும் என்றார்.
இதில் கூடுதல் நடவடிக்கைகள் தேவைப்பட்டால் அது குறித்து அமைச்சு கவனமாக ஆராயும் என்றும் அவர் தெரிவித்தார்.
“அன்றாடம் சந்தையில், உணவங்காடி நிலையத்தில் அல்லது மின்தூக்கியில் நிகழும் செயல்கள் எல்லாவற்றையும் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதையோ சிறைத் தண்டனை விதிப்பதையோ அல்லது அபராதம் விதிப்பதையோ சம்பந்தப்பட்டவர்களைக் குற்றவாளிகளாக நடத்துவதையோ நாம் யாரும் விரும்ப மாட்டோம்.
“அது சாத்தியமற்றதொரு சூழல் என்று நான் கருதுகிறேன். மேலும், அவ்வாறு செய்வது நிலைமையை சரிசெய்வதற்குப் பதில் மோசமாக்கிவிடும்.
“அவ்வாறு செய்வதற்குப் பதிலாக, தண்டனைக்கு உட்படாத தடைகளின் கட்டமைப்பு ஒன்று பற்றி பரிசீலிப்பது தொடர்பாக கலாசார, சமூக, இளையர் அமைச்சுடனும் இன நல்லிணக்கத்தை வளர்க்கும் தேசிய அமைப்பான OnePeople.sg போன்ற அமைப்புகளுடனும் இணைந்து அணுக்கமாக அரசாங்கம் பணியாற்றும்.
“எனவே, நெறிமுறைகளை மீறும் ஒருவரை, எந்த சமூகத்திற்குப் பங்கம் விளைவித்தாரோ அல்லது எந்த சமூகத்தைச் சரி
வரப் புரிந்துகொள்ளவில்லையோ அந்த சமூகத்திற்குச் சேவையாற்றுமாறு கேட்டுக்கொள்ளலாம்.
“ஆக, ஒருவரைத் தண்டிக்காமல், குற்ற ஆவணங்களில் அவரைச் சம்பந்தப்படுத்தாமல், அவரை அசிங்கப்படுத்தாமல் பெரியதொரு சமூகப் புரிந்துணர்வை அவரிடம் ஏற்படுத்த இந்த ஏற்பாடு கைகொடுக்கும்.
“ஆகையால், ஒருவரை ஒருவர் நல்ல
முறையில் புரிந்துகொள்ளச் செய்வதற்கான முயற்சியின் மீதே நமது கவனம் இருக்க வேண்டும்,” என்று தெரிவித்தார் திரு சண்முகம்.
சுமார் 31 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்திற்கு உட்பட்ட சமூக சீர்திருத்த நடவடிக்கையைப் போன்றது இந்த அணுகுமுறை.
குற்றம் இழைப்போர் திருந்துவதற்கு வாய்ப்
பளிக்கும் விதமாக பாதிக்கப்பட்டோரிடம் தனியாகவோ பொதுவிலோ மன்னிப்புக் கேட்க வைப்பது அல்லது அனைத்து சமய நட
வடிக்கைகளில் பங்கேற்கச் செய்வது போன்ற அணுகுமுறைதான் சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
புதிய இன நல்லிணக்கச் சட்டம் இதனை மாதிரியாகக்கொள்ளும் எனத் தெரிகிறது.
இன அடிப்படையில் வேலைவாய்ப்பில் பாரபட்சம் காட்டப்படுவதைக் கட்டுப்படுத்தும் வழிகாட்டி நெறிமுறைகள் இனி சட்ட வடிவம் காண இருப்பதாகவும் பிரதமர் லீ தமது தேசிய தினப் பேரணி உரையில் குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சர் சண்முகம்: புதிய இன நல்லிணக்கச் சட்டத்தில் சேர்ப்பது குறித்து பரிசீலனை
Comments