Tamil Murasu | 31 December 2021
கொவிட்-19 கிருமிப்பரவலுக்குப் பிறகு அடுத்தடுத்து கிருமிப்பரவல்கள் ஏற்பட்டாலும் தவறான மனப்போக்குகளைக் களைந்து ஆக்ககரமான எண்ணங்களை வளர்க்கும் நோக்கில் பல்வேறு சமயத் தலைவர்கள் ஒன்றுகூடி கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
சமய நல்லிணக்கத்தை மேம் படுத்தும் ‘ஹியுமெனிட்டி மேட்டர்ஸ்’ அமைப்பு, ஃபெய்த்ஃபுலி ஆசியான் 2021 என்ற நிகழ்ச்சியை டிசம்பர் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடத்தியது.
‘புராமா செண்டர்’ ஹோட்டலில் திங்கட்கிழமை 27ஆம் தேதி மாலையன்று நடைபெற்ற முதல் நாள் நிகழ்ச்சியின் போது ‘மைண்டிங் தி மிஸ்டரி- டிசீஸ் எக்ஸ்’ என்ற கலந்துரையாடல் அங்கம் வகித்தது.
ஆசியான் நாடுகளைச் சேர்ந்த 40 பங்கேற்பாளர்களும் 150 வருகையாளர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் தொடக்க உரையை ஆற்றிய ஹியுமெனிட்டி மேட்டர்ஸ் சமய நல அமைப்பின் தலைவரும் முன்னாள் ஆசியான் தூதராகவும் செயல்பட்ட ஓங் கெங் யோ, கிருமிப்பரவல் சூழலில் பொய்த்தகவலைக் கையாள சமுதாயத்திற்கு வழிகாட்டும் பொறுப்பு சமய அமைப்புகளுக்கு இருப்பதாகத் தெரிவித்தார்.
“பகைமைப்போக்கும் வெறுப்புணர்வும் சில வேளைகளில் நமக்குத் தெரியாமலேயே நம்மிடையே தலைதூக்கலாம்.
“இதுவரை நாம் கட்டிக்காத்து வந்த ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் தொடர்ந்து தனிமனிதர்களாகவும் சமுதாயமாகவும் கட்டிக்காப்பது முக்கியம்,” என்று அவர் கூறினார்.
திரு ஓங்கின் உரைக்குப் பிறகு, ‘டிசீஸ்-எக்ஸ்’ என்ற கருத்தளவிலான (hypothetical) கிருமிப்பரவல் தொடர்பிலான கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
பௌத்த, இஸ்லாமிய, கிறிஸ்துவ மற்றும் இந்து சமயங்களைச் சேர்ந்த நிபுணர்கள் இதில் பங்கேற்று தங்களது கருத்துகளை வெளிப்படுத்தினர்.
மனம் திறந்து பேசுவதற்கும் புரிந்துணைர்வை வளர்ப்பதற்கும் இது போன்ற நிகழ்ச்சிகள் உதவு வதாக இந்து சமயத்தின் சார்பில் பேசிய இயன் மருத்துவர் திலகா கோவிந்தசாமி தெரிவித்தார்.
“இனம், சமயம் ஆகிய வேறுபாடுகள் இருந்தாலும் நமது மனிதத்தன்மையை நமக்கு நினைவு படுத்தும் தருணங்களாக இத்தகைய கலந்துரையாடல்கள் அமைகின்றன,” என்று ‘ஹியுமெனிட்டி மேட்டர்ஸ்’ அமைப்பின் நிர்வாக சபையின் உறுப்பினரான திருவாட்டி திலகா தமிழ் முரசிடம் கூறினார்.
“ஏற்கெனவே திறந்த மனதுடன் நிகழ்ச்சிக்கு வருபவர்கள் அந் நிகழ்ச்சியால் பயனடைந்து திருப்தியுடன் திரும்புகின்றனர்.
“ஆனால் சகிப்புத்தன்மை குறைவானவர்கள் இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. அத்தகையோரும் மனம் திறந்து பேசுவதற்கான பாதுகாப்பு உணர்வு அளிக்கப்படவேண்டும்.
“அத்தகைய உணர்வை ஏற் படுத்தும் கலையை இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதன்மூலம் மெல்லக் கற்று வருகிறேன்,” என்று நிகழ்ச்சி பார்வையாளரான தொடக்கக் கல்லூரி ஆசிரியர் குர்மிட் சிங் தெரிவித்தார்.
இந்த மூன்று நாள் நிகழ்ச்சியில் சுற்றுலாக்களும் திரைப்படக் காணல் ஒன்றும் இடம்பெற்றன.
Comments