top of page

அதிபர்: சமூகப் பிணைப்புக்கு உரையாடல், ஈடுபாடு முக்கியம்

Tamil Murasu | 12 September 2019

 

சமூகங்களில் பாலங்களை அமைக்க உரையாடல்களும், மரியாதையும் பயன்மிக்க ஈடுபாடும் அவசியம் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார். பிலிபீன்சின், மிண்டானோ, டாவோ நகரில் உள்ள அட்டினியோ டி டாவோ பல்கலைக்கழகத்தில் இளையர்களுடன் நேற்று உரையாடிய அதிபர் ஹலிமா, மரியாதையுடனும் அர்த்தத்துடனும் பன்முகத்தன்மையுடனும் சமூகங்களுக்கிடையே உரையாடலை ஏற்படுத்துவது எளிதானதல்ல என்றார்.

பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் கட்டி எழுப்ப, தற்போது நாம் மேற்கொண்டு வருவதைப் போன்ற தொடர்ச்சியான உரையாடலும் ஈடுபடுத்தலும் முக்கியம் என்று கூறினார் திருவாட்டி ஹலிமா.

உலகம் மேலும் சிக்கலானதாகவும், மக்கள், பொருட்கள், யோசனைகள் யாவும் அதிக சுதந்திரத்துடன் எல்லைகளைக் கடப்ப தாகவும் இருக்கும் இக்காலகட்டத்தில் இத்தகைய ஈடுபாட்டின் முக்கியத்துவம் அதிகரித்துவருகிறது.

அதேநேரத்தில் வெவ்வேறு இனங்கள், சமயங்களைச் சேர்ந்த மக்களிடம் வளர்ந்துவரும் கருத்துவேறுபாடுகளால் சமூகங்கள் அதிகம் பிளவுபட்டு வருவதையும் நாம் காண்கிறோம். மேலும், தீவிரத்தன்மையும் தனித்தன்மையும் வலுவடைந்து வருகின்றன என்று குறிப்பிட்டார் திருவாட்டி ஹலிமா.

ஆனால், ஒரு சமூகக் குழு, மற்றொன்றை அச்சுறுத்தலாக நினைத்தால் சமுதாயம் சிதையக்கூடிய அபாயம் ஏற்படும் என்று பிலிப்பீன்சுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள திருவாட்டி ஹலிமா சொன்னார். பிரிவினை சக்திகளைவென்று, சுவர்களுக்குப் பதிலாக பாலங்களை அமைக்க வேண்டியது முக்கியம் என்றார் அவர். மரியாதைக்குரிய ஈடுபாட்டின் ஒரு பகுதியாக பாரபட்சம், சகிப்புத்தன்மையின்மை, அறியாமை ஆகியவற்றை எதிர்கொள்ள உரையாடல் அவசியம். பேசுவது, கேட்பது மூலமும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதன் மூலமும் சமூக நம்பிக்கையை ஆழமாக்கி, பிணைப்பை வளர்க்க முடியும். ஒன்றுபட்ட சமூகமாக நாம் வலுவாக இணைந்திருப்பதை உறுதிப்படுத்த முடியும் என அவர் கூறினார்.அத்தகைய உரையாடல்களை ஊக்குவிக்கும் வகையில் ‘ஒத்திசைவான சமூகங்கள்’ அனைத் துலக மாநாட்டை சிங்கப்பூர் கடந்த ஜூன் மாதம் நடத்தியது.

அந்த மாநாட்டில் 40 நாடுகளைச் சேர்ந்த 1,000 பேர் பங்கேற்றனர். மிண்டானோவும் சிங்கப்பூரும் சமயம், இனம், கலாசாரம் ஆகியவற்றில் பன்முகத்தன்மையைக் கொண்டவை. இரு சமூகங்களும் தங்களது பன்முகத்தன்மையை தங்களது பலமாகக் கொள்ளலாம் என திருவாட்டி ஹலிமா கூறினார்.

பிலிப்பீன்சுக்கு ஐந்து நாள் பயணம் மேற்கொண்டு இருக்கும் அதிபர் ஹலிமா யாக்கோப், நேற்று இரவு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பிலிப்பீன்சில் வாழும் சிங்கப்பூரர்களைச் சந்தித்தார்.

Comments


Commenting on this post isn't available anymore. Contact the site owner for more info.

UEN 201920766R
© Humanity Matters 2023. All rights reserved.

  • Instagram
  • Facebook
  • Youtube
bottom of page